ஆணவச்செருக்குமிக்க பண்டிதர்

ஒருமுறை ஒரு மிகப்பெரிய பண்டிதர் கிருஷ்ணதேவராயர் அவைக்கு வந்தார், அவரை வாதில் எவரும் வென்றதில்லை, அரசவையில் உள்ள மிகப்பெரிய பண்டிதர்கள்கூட, அவரைக் கண்டு அஞ்சிநடுங்கினர். அதைக்கண்ட நம் ஹீரோ தெனாலி எழுந்து, பண்டிதரே நான் தயார் உம்மிடம் வாதாட, நாளை வாரும் எனக்கூற, அரசர் முதல் அத்தனை பேரும் மகிழ்ந்தனர், இருந்தாலும் மெத்தப்படித்த அந்த பண்டிதரை எப்படி வெல்வான் தெனாலி என ஐயமும் கொண்டனர். மறுநாள் அவைக்கு தெனாலி, மிகப்பெரிய பண்டிதர்போல ஆடைஆபரணங்கள் எல்லாம் அணிந்து, கையில் பட்டுத்துணியால் சுற்றப்பட்டிருந்த ஒரு ஏட்டுச் சுவடியுடன் வந்தான்.


எல்லாம் கற்றறிந்ததாக ஆணவச்செருக்குமிக்க அந்த பண்டிதர் இதனைக் கண்டார். அது எந்தநூலாக இருக்கும் என எண்ணி தெனாலியிடம் கேட்க, அவன் படு அசால்ட்டாக அவரை நோக்கி, இது "திலகாஷ்ட மகிஷ பந்தனம்" எனும் அரியநூல். இதன் மூலம்தான் உம்மிடம் வாதிடப்போகிறேன் எனக் கம்பீரமாகக் கூற, பண்டிதர் அதிர்ந்து, எத்தனையோ நூல்கள் படித்திருந்தாலும், இந்தநூலை இதுவரை கேள்விப்பட்டதுகூட இல்லை, அந்தநூலின் சாரம் என்னவென்றே அறியாமல், அதிலிருந்து தெனாலி கேட்கும் கேள்விகளுக்கு நம்மால் எப்படி பதில்சொல்ல முடியும், முதல்முறையாக வாதத்தில் தோற்றுவிடுவோமோ எனும் அச்சத்தில், மெதுவாக, நாம் நாளை வாதத்தைத் தொடங்கலாம் என்று கூறிச் சென்றுவிட்டார். அன்றிரவே ஊரைவிட்டே, ஓடியும்விட்டார்.

றுநாள் அவையில் அனைவரும் பண்டிதர் ஓடிவிட்டத் தகவல் அறிந்து, ஈசியாக வாதில் வென்ற தெனாலியைக்கட்டிக்கொண்டு குதூகலித்தனர், மன்னர் வெகுவாக மகிழ்ந்து அவனிடம், அது என்ன நூலப்பா, உன் கையில் இருந்தது? நானும் இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே, எங்கே அந்த நூலைக்காட்டு" எனக் கேட்டார்.

தெனாலி பட்டுத்துணியை விலக்க, அதனுள் எள், விறகு மற்றும் எருமை மாடுகளைக் கட்டும் கயிறு இருந்தது. தெனாலி " மன்னா, தில என்றால் எள், காஷ்டம் என்றால் விறகு, மகிஷ பந்தனம் என்றால் எருமை மாட்டைக் கட்டும் கயிறு இதைத்தான் நான் "திலகாஷ்ட மகிஷ பந்தனம்" என உட்பொருள் கொண்டு பண்டிதரிடம் சொன்னேன். அதனை அறியாத அவர், இதுவரை தான் அறியாத மிகப் பெரிய நூல் என எண்ணி தோல்விக்குப் பயந்து ஓடிவிட்டார் எனச் சிரித்தான். மீண்டும் ஒருமுறை தனது சமயோசித புத்தியால் கிருஷ்ணதேவராயர் மனம் கவர்ந்தான் தெனாலி, மற்றவர்களும் வியந்தனர்.
أحدث أقدم