குருவின் நல்ல உள்ளம்
ஒரு பணக்கார பெண்மணியின் வீட்டருகே அவர்கள் நடந்தனர். அப்போது ஒரு சிறிய பெண் குழந்தை அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தது. குழந்தைகள் மேல் மிகுந்த அன்புடையவர் ஞானி. அவர் குழந்தையை அன்புடன் நோக்கினார்.
குழந்தை ஒரு தட்டு நிரம்ப ரோஜா மலர்களைக் கொண்டு வந்து சித்தானந்தர் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.
மலர்கள், மணம் தரும் பொருட்கள், தைலங்கள் என்றால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார் என்பது சீடர்களுக்குத் தெரியும். ஒரு ரோஜா மலரை மட்டும் எடுத்துக் கொண்டு தட்டை சீடர்களிடம் நீட்டினார். சீடர்களுக்கு சொல்லவா வேண்டும். தலைக்கு இரண்டு மூன்றாக அவர்கள் மலரை அள்ளிக் கொண்டனர்.
மலர்களை அர்பணித்த குழந்தை மகிழ்ச்சியுடன் இல்லம் சென்றது. சீடர்கள் புடை சூழ சித்தானந்தரின் உலா தொடங்கியது.
ஒரு வயதான மூதாட்டி ஞானியை தன் வீட்டுக்குள் வரவேற்றாள். சீடர்கள் உள்ளே சென்று அமர்ந்தனர். ஒரு பணியாள் ஆப்பிள் பழத்தட்டை அவர் முன் வைத்தார். ஒரு பழத்தை எடுத்துச் சுவைத்தார் சித்தானந்தர். பழம் மிகவும் சுவையாக இருந்தது. அவைகளை எடுத்து தன் சீடர்களுக்கு வழங்கினார்.
சீடர்கள் பழங்களை சுவைத்து உண்டனர். ஞானியைத் தொடர்ந்து செல்வதால் அவர்களுக்கு அவ்வப்போது நல்ல சுவையான பொருட்கள் கிடைத்து வந்தன. எனவே, இந்த சந்தர்ப்பங்களை சீடர்களில் எவரும் தவறவிடுவதில்லை.
செல்வந்தர்கள் வாழும் வீதிகளை எல்லாம் அவர்கள் கடந்து சென்றனர். இப்போது வசதி குறைந்தவர்கள் இடம்; நகரின் ஒதுக்குப் புறமான பகுதி.
ஏழை விதவைப் பெண்ணொருத்தி அங்கே நின்று கொண்டிருந்தாள். அவள் ஞானியை தன் சிறிய வீட்டுக்கு வருமாறு அழைத்தாள். அவளது அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். அவரும் சீடர்களும் உள்ளே சென்று அமர்ந்தனர்.
"ஐயனே, நீங்கள் இதைச் சாப்பிட வேண்டும்," என்று கூறி ஒரு தட்டை நீட்டினாள்.
தட்டைப் பெற்றுக் கொண்ட ஞானி அதில் திராட்சைப் பழங்கள் இருந்ததை பார்த் தார்.
ஒரு பழத்தை எடுத்து வாயில் போட்டார். சுவைத்து உண்டார். சீடர்கள் பார்த்துக் கொண்டே இருந்தனர்.
மீண்டும் ஒரு பழத்தைப் பிய்த்து வாயில் போட்டு மென்று சுவைத்தார். இப்படியாக எல்லா பழத்தையும் தான் ஒருவராகவே தின்று தீர்த்தார். தங்களுக்கு அப்பழத்தை வழங்காமல் தானே உண்டதைக் கண்ட சீடர்கள் வியப்படைந்தனர்.
திராட்சைப் பழம் வழங்கிய ஏழைக் கைம்பெண்ணுக்கு நன்றி கூறினார் ஞானி. பின்னர் வெளியே வந்து நடக்கத் தொடங்கினார். சீடர்கள் அவரோடு நடந்தனர்.
சீடர்கள் முகத்தில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. "இதுவரை எல்லா பொருட்களையும், உணவையும் பகிர்ந்து கொண்ட குரு திராட்சைப் பழங்களை மட்டும் தன்னந்தனியாய்த் தானே உண்டது ஏன்?" எல்லாருடைய உள்ளத்திலும் இக்கேள்வி எழுந்து நின்றது.
சீடர் ஒருவர் வாய் திறந்து இக்கேள்வியைக் கேட்டே விட்டார். "நீங்கள் ஏன் தனியாகச் சாப்பிட்டீர்கள்? எங்களுக்கு ஒரு பழங்கூட தரவில்லையே... ஏன்?"
"அந்த திராட்சைப் பழம் மிகவும் புளிப்பாய் இருந்தது. எனவே, நான் ஒருவனாக அவற்றைத் தின்றேன்," என்றார் குரு.
"உங்களுடைய சுகத்திலும் துக்கத்திலும் நாங்கள் பங்கு கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க, சுவையற்றதை நீங்கள் தனியாக உண்ண வேண்டும்; சுவை மிகுந்ததை மட்டும் எங்களோடு பகிர்ந்துண்ண வேண்டுமா? இது நீதியாகுமா?"
"என்னுடைய சுகத்திலும் துக்கத்திலும் நீங்கள் பங்கு கொள்ள விரும்புவது உண்மையாக இருக்கலாம். ஆனால், இதில் ஓர் ஏழைக் கைம்பெண் இடையே இருக்கிறாள். அவள் தந்த திராட்சைப் பழங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டால், ’இந்தப் பழம் புளிக்கிறது' என்று நீங்கள் சாப்பிடும் போதே சொல்லி விமர்சனம் செய்து அந்தப் பெண்ணின் மனதைப் புண்படுத்திவிடுவீர்கள். அவளது மனது படாத பாடுபட்டு நொந்து போய்விடும். அதனால் தான் திராட்சைப் பழங்களை உங்களுக்குத் தரவில்லை" என்று சொன்னார் முனிவர்.
எவருடைய மனதையும் புண்படுத்தக் கூடாது என்ற கருத்தில் தங்கள் குரு எத்தனை உண்மையாக இருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ந்தனர் சீடர்கள்.